Scholarship for Students in Vellore District

வேலூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ–மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

கல்வி உதவித்தொகை

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை படிக்கும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி வகுப்பை சேர்ந்த சிறுபான்மையின மாணவ–மாணவிகள் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2013–14–ம் ஆண்டுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ–மாணவிகளின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவ–மாணவிகள் முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் (1–ம் வகுப்பு நீங்கலாக) 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இதர நலத்துறைகள், நலவாரியங்கள் மூலம் 2013–14–ம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது. குடும்பத்தில் அதிகபட்சம் இருவருக்கு மட்டும் இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும். குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தில் உள்ள மாணவ–மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பங்கள்

மாணவ–மாணவிகள் புதிதாகவும், புதுப்பித்தலுக்கும் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களைwww.tn.gov.in/bcmbcmw/welfschemes_minorities.htm என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து தாங்கள் படிக்கும் கல்வி நிலையங்களில் சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஆகஸ்டு மாதம் 15–ந் தேதி கடைசி நாள் ஆகும். கல்வி நிலையங்கள் மாணவ–மாணவிகளிடம் இருந்து பெற்ற கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை சரிபார்த்து அதற்கான கேட்பு பட்டியலை உரிய படிவத்தில் பதித்து வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் ஆகஸ்டு மாதம் 22–ந் தேதி சமர்பிக்க வேண்டும்.

எனவே, சிறுபான்மையின மாணவ–மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *